கும்பகோணம் கோயில்கள்
திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள் ஆகிய ஆதீனங்களின் சமயப்பணிகளும், சாரங்கதேவரின் வீர சைவமடம், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் நிறுவிய சங்கரமடம், ஸ்ரீ அஹோபிலமடம், ஸ்ரீ மத்வாச்சாரியாரின் மடம் ஆகியவற்றின் சமயப்பணிகளும், கும்பகோண ஆலயங் களின் வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்திருக் கின்றன. கணிதமேதை இராமானுஜம் அவதரித்த ஊர், சங்க இலக்கியப் பொக்கிஷத்தைத் தேடித் தந்த உ.வே. சாமிநாதய்யர் கல்லூரிப் பேராசிரியராய்த் தமிழ் கற்பித்த ஊர் என்ற பெருமையும் கும்பகோணத்திற்கு உண்டு.
பெரும்பாலும் நதிக்கரைகளிலும் ஆற்றங் கரைகளிலும் கோயில்கள் அமைவதுதான் தமிழகத்தின் பெருமைக்குரிய செய்தி. அந்த அளவில் காவிரி ஆற்றுக்கும் அரிசிலாற்றுக் கும் இடையில் அமைந்த ஊர் கும்ப கோணம். ‘அரி சொல் ஆறு’ என்பது தான் அரிசிலாறு என்று வழக்கில் மருவி வந்துள்ளதாய்ச் சொல்வார் உண்டு. இங்கு திரும்பும் இடமெல்லாம் கோயில்களும் கோபுரங்களும் கண்ணுக்கு விருந்தாய்க் காட்சி அளிக்கின்றன.
கும்பகோணம் என்றால் நினைவுக்கு வருவது மகாமகம். வடக்கே அலகாபாத்தில் பிரயாகையில் திரிவேணி சங்கமத்தில் நீராடுதலைக் குறிக்கும் பிரபலமான திருவிழா ‘கும்பமேளா’ என்றழைக்கப்படுகின்றது. ஆந்திர மாநிலத்தில் கோதாவரி புஷ் கரிணியில் நீராடும் விழாவும் இது போன்றதே. ஆனால் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் விழா, சற்று வேறு பட்டது. முதலில் குறிப்பிட்ட இரண்டு விழாக்களும் நதியிலும் ஆற்றிலும் நீராடும் விழா. தமிழ்நாட்டு மகாமகப் பெருவிழா குளத்திலே நீராடும் விழா.
காசிக்கும் கங்கைக்கும் இல்லாத சிறப்பு கும்பகோணத்திற்கு இருப்பதைக் குறிக்கும் ஸ்லோகம் ஒன்று உண்டு.
”அன்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம்
புண்ய க்ஷேத்ரே விநச்யதி |
புண்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம்
வாரணஸ்யாம் விநச்யதி |
வாரணிஸ்யாம் க்ருதம் பாபம்
கும்பகோணே விநச்யதி |
கும்பகோணே க்ருதம் பாபம்
கும்பகோணே விநச்யதி ||
இதன் பொருள்: அந்நியத் தலங்களில் செய்யும் பாவம் ஏதாவதொரு புண்ணிய க்ஷேத்திரத்தில் பரிகாரப்படும். புண்ணியத் தலங்களில் செய்யும் பாவம் வாரணாசியில் (காசி) பரிகாரப்படும். வாரணாசியில் செய்யும் பாவமோ கும்பகோணத்திலே பரிகாரப்படும். கும்பகோணத்தில் செய்யும் பாவம் எல்லாம் கும்பகோணத்தில் மட்டுமே பரிகாரப்படும்.
காசியைக்காட்டிலும் சிறந்தது கும்பகோணம் என்பது இது சொல்லும் உண்மை.
தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் தம்மு டைய பாசுரத்தில் ஓரிடத்தில் ‘கங்கையின் புனிதமாய காவிரி’ என்று பெருமை பேசுகிறார்.
மகாமகம் என்றால் என்ன?
12 ஆண்டிற்கொருமுறை மாசிமாதத்தில் மகநட்சத்திரத்தில் குரு சிம்மராசியிலும், சூரியன் கும்பராசியிலும் சேர்கின்ற நாள். அது பெளர்ணமி தினமாகும். அன்று பகலில் ரிஷப லக்னத்தில் இந்தச் சேர்க்கை நிகழும் தருணம்தான் மகாமகப் புண்ணிய காலமென்று கூறப்படுகிறது.
ஏதாவதொரு மகாமகத்தில் பெளர்ணமி யன்று மாசிமகம் இருந்தும், குரு சிம்ம ராசியில் சேருவது தாமதமாகிப் போகும். பெளர்ணமிக்கு அடுத்த நாள் குரு சிம்மராசியில் சேர்ந்தாலும் சேரும். இருந்தபோதிலும் பெளர்ணமியன்றே மகாமகம் கொண்டாடப்படும். 1945ம் வருட மகாமகம் இவ்வாறே கொண்டாடப்பட்டது.
மகாமகக் குளம்
பிரளய காலத்தில் சிவபெருமான் ஒரு கும்பத்தில் நீர் நிரப்பி வெள்ளப் பிரவாகத்தில் மிதக்க விட்டுவிட்டு, பின்னர் கும்பத்தைக் குறிபார்த்து சிவபெருமான் அனுப்பிய அஸ்திரம் பட்டுக் கும்பம் உடைந்து அதிலிருந்து சிந்திய நீர்தான் மகாமகக்குளம் ஆயிற்று என்றும், அவ்வூர் குடந்தை ஆயிற்று என்றும் புராணம் பேசுகிறது.
இந்தக் குளம் தேவ தச்சனால் கட்டப்பட்டது என்று புராணம் கூறுகிறது. இக்குளத்தில் மக்கள் இறங்கி நீராடப் படிக்கட்டுகள் அமைத்த பெருமை 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த தஞ்சை நாயக்க மன்னர் பரம்பரையில் வந்த அச்சுதப்ப நாயக்கரைச் சேரும். அவர் அளித்த திரவியத்தைக் கொண்டு அவரிடம் அமைச்சராயிருந்த ஸ்ரீ கோவிந்த தீக்ஷ¢தர் இக்குளத்தைச் சுற்றி மண்டபங்களைக் கட்டினார் என்று வரலாறு கூறும். மேலும் கோவிந்த தீக்ஷ¢தர் தாம் ஈட்டிய செல்வம் அனைத்தையும் கும்பகோணத்திலுள்ள ஆலயப்பணிகளுக்கும், பொதுநலத் தொண்டிற்குமே செலவழித்திருக்கிறார். அவர் பெயரில் கும்பகோணத்தில் நடந்து வரும் வேதபாடசாலை இன்றைக்கும் அவரது பெயரை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது.
அச்சுதப்ப நாயக்கர் தன் எடைக்கு எடை துலாபாரம் செய்து தந்த பொன்னைக் கொண்டு கும்பகோணப் பெருமாள் கோயிலைக் கட்டியதாக தமிழக வரலாறு கூறுகிறது. இவர்களைப் போன்ற மன்னர் களும் வள்ளல்களும் கொண்டிருந்த இறைபக்தியும் வள்ளல் தன்மையும் சமயவளர்ச்சிக்கும் அறப்பணிகளுக்கும் உதவியிருப்பதோடு வரலாற்றில் அவர்கள் பெயரை நிலைபெறச் செய்திருக்கின்றன.
மகாமக புண்ணிய தீர்த்த வரலாறு
மஹா – மா – அகம்.
அகம் = பாவம் மா= பற்றாது. பாவம் பற்றாத மகாதீர்த்தம் என்பது பொருள். புண்ணிய நதிகளில் நீராடுவதால் மக்கள் தங்கள் பாவங்களைத் தீர்த்துக் கொள்வ தாக காலங்காலமாக ஒரு நம்பிக்கை நிலவி வருகிறது. நதிகளின் அதிதேவதைகளான கங்கை, யமுனை, நர்மதை, ஸரஸ்வதி, கோதாவரி, காவிரி, கன்னி (மகாநதி) பயோஷ்னி (பாலாறு) சரயூ என்ற நவகன்னியரும் ஒரு சமயம் பரமேஸ்வரனிடம் சென்று மக்கள் பாவங்களைத் தாங்கள் ஏற்றுக் கொள்வதால் தங்களிடம் சேரும் மாசினைப் போக்க வழி கேட்டனர். இறைவனும் அவர்கள் கும்பகோணம் சென்று நீராடினால் மாசு நீங்குவதுடன் இனி எந்த பாவமும் ஒட்டாத நிலையும் உண்டாகும் என்று அருளிச் செய்தாராம்.
கங்கே ச யமுனே சைவ நர்மதா ச
ஸரஸ்வதி
கோதாவரி ச காவேரி கன்யா நாம்னா
மஹாநதி
பயோஷ்ணீ ஸரயூ ஸ்சைவ நனவதாஸ்
ஸரித: ஸீபா |
என்று ஒன்பது நதிகளின் பெயரைச் சொல்லிக் குளத்தில் நீராடுவது மரபு.
நவகன்னிகள் என்பதால் ‘கன்யா தீர்த்தம்’ என்றும், ‘அறுபத்தாறு கோடி தீர்த்தம்’ என்றும் இது அழைக்கப்படுகின்றது. குளத்தின் வடகரையில் பிரம்மதேவர் நீராடியதால் பிரம்மதீர்த்தம் என்றும், இந்த தீர்த்தம் பித்ருக்களுக்கான கடன்களைச் செய்ய உகந்தது என்றும் கூறப்படுகிறது. பதினாறு பேறுகளையும் தரவல்லது என்று போற்றப்படும் கங்கா தீர்த்தத்தில்தான் காஞ்சி காமகோடி முனிவர் நீராடுவது வழக்கம்.
மகாமகக்குளத்தில் முதலில் நீராடி, அடுத்து பொற்றாமரைக் குளத்தில் நீராடி, மூன்றா வதாகக் காவிரியில் நீராடிவிட்டு கும்பேஸ் வரர் ஆலயம் சென்று கும்பேசுவரரை வழிபடுவது இங்கு ஐதீகமாக உள்ளது.
சோடசலிங்க மண்டபங்கள்
மகாமகக்குளத்தைச் சுற்றிலும் 16 மண்டபங்களில் தனித்தனியாக சிவலிங்கத் திருமேனி வடிவில் உறையும் ஈஸ்வரனுக்கு தனித்தனியாக 16 திருநாமங்கள் உள்ளன. இம்மண்டபத்தின் வடக்கே காசிவிஸ்வநாதர் ஆலயமும், கிழக்கே அபிமுக்தீஸ்வரர் ஆலயமும், மேற்கே கெளதமேசுவரர் ஆலயமும் தெற்கே பாணபுரீஸ்வரர் ஆலயமும் குறிப்பிடத்தக்க மிகப்பெரிய கோயில்கள்.
தீர்த்தவாரி
உபய ப்ரதான §க்ஷத்திரம் என்று கும்பகோணத்தை சிறப்பித்து கூறுகிறார்கள். காரணம் இங்குள்ள மூலவருக்கு உள்ள முக்கியத்துவம் உற்சவர்க்கும் உண்டு. மகாமகவிழா அன்று கும்பேஸ்வரர், நாகேஸ்வரர், விசுவேஸ்வரர், அபிமுக்தீஸ் வரர், சோமேஸ்வரர், கெளதமேஸ்வரர், காமேஸ்வரர், கோடீஸ்வரர், பாண புரீஸ்வரர், கம்பட்ட விஸ்வேஸ்வரர் ஆகிய பத்து ஆலயமூர்த்திகளை மேலே குறிப்பிட்ட மண்டபங்களில் எழுந்தருளச் செய்து தீர்த்தம் அளிப்பது வழக்கம். இவர்களில் கும்பேசுவரர் முதன்மை பெறுகின்றார். ஆதிகும்பேசுவரர் என்று அழைக்கப்படும் ஈஸ்வரன் ரிஷபாரூடராய் எழுந்தருளியிருக் கும் அழகும் ரிஷபத்தின் அழகும் கண் கொள்ளாக்காட்சி.
மகாமகக் குளத்தின் நடுவில் அமைந்த 66 கோடி புண்ணிய தீர்த்தங்கள் சங்கமிக்கும் ‘அமிர்தவாவி’யில் நீராடுவோர் தோஷங்கள், பயங்கள், குற்றங்கள், நோய்கள் போன்றவை நீங்கி, கல்வி, செல்வம், பொன், பதினாறு பேறுகள், ஆரோக்கியம், ஞானம், அனைத்தும் கூடப்பெற்று எண்ணி எண்ணியாங்கு எய்த, அசுவமேத யாகம் செய்த பலனும் கிட்ட, பித்ருக்களைக் கடையேற்றித் தாமும் வானுலக வாழ்வு பெறலாம் என்று கூறப்படுகிறது.
இலக்கியத்தில் குடமூக்கு என்று குறிப்பிடப்பட்டாலும் மக்கள் வழக்கில் உள்ள கும்பகோணம் என்ற பெயரே பிரசித்தமானது. பேரூழிக் காலத்தில் பிரமனின் வேண்டுகோளுக்கிணங்கி, இறைவன் தந்த அமுத கலசம் தங்கிய இடமாதலின் இத்தலம் கும்பகோணம் என்று பெயர் பெற்றது. குரு சிம்மராசியில் நிற்க, சந்திரன் கும்பராசியிலிருக்கும் (மாசிமக) பௌர்ணமி நாளில் தான் மகாமகம் நடைபெறுகிறது. இத்தீர்த்தம், அமுதகும்பம் வழிந்தோடித் தங்கியதால் "அமுதசரோருகம்" என்றும் அழைக்கப்படுகிறது.
கும்பேஸ்வரர் திருக்கோயில்
உலகம் அழியும் பிரளய நேரம் வந்தபோது, பிரம்மா தனது படைப்பு ஆற்றலை எல்லாம் அமுதத்தில் கலந்து ஒரு குடத்தில் (கும்பம்) இட்டு அந்தக் குடத்தை இமயமலை உச்சியில் பாதுகாப்பாக வைத்தார். பிரளய காலத்தில் கடல் பொங்கி இமயமலை உச்சி வரை சென்ற போது பாதுகாப்பாக வைக்கப்பட்ட குடம் நீரில் மிதந்து சென்று தெற்கே வந்து பிரளய நீர் வடிந்ததும் ஓரிடத்தில் தரைதட்டி நின்றது. அவ்வாறு குடம் நின்ற இடமே நாம் இப்போது கும்பகோணம் என்று கூறும் குடமூக்கு என்ற பாடல் பெற்ற தலம். சிவபெருமான் தரை தட்டிய குடத்தின் மீது அம்பைச் செலுத்தி, குடம் உடைந்து அமுதம் கொட்டியது. சிவபெருமான் அமுதத்தில் நனைந்த மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி அதனுள் அவர் ஐக்கியமானார். குடம் உடைந்து கீழே சிந்திய அமுதம், மணல் இவற்றால் உருவான இவர் ஆதிகும்பேஸ்வரர் என்ற பெயரில் இவ்விடத்தில் தங்கினார்.
கும்பகோணத்தில் நடைபெறும் விழாக்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா மிகவும் பெயர் பெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு சிம்மராசியில் இருக்க, சூரியன் கும்பராசியில் இருக்க மாசி மாதத்தில் பௌர்ணமி தினம் அன்று மக நட்சத்திரம் கூடி இருக்கும் சேர்க்கை நடைபெறும். அன்றைய தினமே மகாமகம் என்று கொண்டாப்படுகிறது. மகாமக தினத்தன்று மகாமகக் குளத்தில் நீராட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் கும்பகோணத்தில் கூடுவர். காசியில் பிறந்தோர் பாவம் கும்பகோணத்தில் போகும், கும்பகோணத்தில் பிறந்தோர் பாவம் மகாமகக் குளத்தில் நீராடினால் போகும் என்று புராணங்கள் கூறுகின்றன. மகாமக தினத்தன்று ஈரேழு பதினான்கு லோகத்தில் வசிப்பவர்களும் இத்திருகுளத்தில் நீராட வருவதாகவும், கங்கை, யமுனை, சரசுவதி, நர்மதை, சிந்து, காவிரி, கோதாவரி சரயூ, பொருநை ஆகிய நதிகளும் கன்னிகளாக இங்கு வந்து இத்திருக்குளத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர் என்றும் ஐதீகம். இந்த மகாமகக் குளம் சுமார் 20 ஏக்கர் பரப்புடையது.